Tue December 11, 2018

அனுதின தியானம்

அனுதின தியானம் - Dec12

 மீகா 
3 அதிகாரம்

 

--------------------------------------------------------------------------------

1. நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.

2. ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி அவர்கள்மேலிருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி,

3. என் ஜனத்தின் சதையைத்தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.

4. அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.

5. தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்றுசொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;

6. தரிசனங்காணக் கூடாத இராத்திரியும், குறிசொல்லக் கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும்.

7. தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நாணி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்.

8. நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.

9. நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,

10. சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.

11. அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

12. ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.

மீகா

4 அதிகாரம்

--------------------------------------------------------------------------------

1. ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.

2. திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

3. அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

4. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

5. சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.

6. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,

7. நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இது முதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.

8. மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.

9. இப்போதும் நீ சத்தமிட்டுக் கதறுவானேன்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒத்த வேதனை உனக்கு உண்டாகும்.

10. சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.

11. சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.

12. ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.

13. சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.

தியானம்

அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார். அது மிகவும் நன்றாயிருந்தது. (ஆதி 1:31)

பிரியமானவர்களே! தேவன் வானத்தையும் பூமியையும், அவற்றில் எல்லாவற்றையும் சிருஷ்டித்துவிட்டு, தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும், பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார் (ஆதி 1:27). அப்பொழுது தேவன் தாம் சிருஷ்டித்தவைகளைப் பார்த்தார் அது நன்றாயிருந்தது. ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து சிருஷ்டித்த யாவையும், பரிசுத்தம் பண்ணி ஆசீர்வதித்தார். கர்த்தர் மனுஷனை படைத்ததின் நோக்கம் என்னவாயிருக்கும்? மூன்று காரியங்களை விளக்குகிறேன். முதலாவது துதி சொல்லி வருவார்கள் (எசா 43:21). ஒருவிசை என் மகள் அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தாள். அவளுடைய 3 வயது மகளை நாங்கள் மாலையில் கடற்கரைக்கு அழைத்துச் செல்வோம். ஒரு நாள் பவுர்ணமி தினம். நிலாவின் வெளிச்சம் கடலில் பிரதிபலித்தது. பொன் மயமாக மணல் காட்சியளித்தது. அதைக் கண்டவுடனே என் 3 வயது பேத்தி thank you Jesus என்று வியந்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள். கடற்கரைக்கு கூட்டி வந்ததற்கு பாட்டி, தாத்தாவுக்கு நன்றி செலுத்த வேண்டியவள் கர்த்தருக்கு நன்றி செலுத்தினாள். ஆம் பிரியமானவர்களே, நன்றியறிதலுள்ளவர்களாயிருங்கள், இரண்டாவது ஆணும், பெண்ணுமாக சிருஷ்டித்து அவர்கள் இருவராயிராமல் ஒருவராய் இருங்கள் என்று சொன்னார். இந்த உண்மையை திரியேக தேவன் வெளிப்படுத்தியிருக்கிறதைக் காண்கிறோம். (ஆதி 2:24,  மாற்கு 10:8, எபே 5:31). ஆண்டவராகிய தேவன்,  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,  ஆண்டவராகிய பரிசுத்த ஆவியானவர் (பவுல் மூலம்) இதை வெளிப்படுத்தியிருக்கிறதைக் காண்கிறோம். இயேசுவை இரட்சகராகக் கொள்ளுங்கள். முப்புரிநூல் அறுந்து போகாது. இருவராயிராமல் ஒருமனதாய் இருங்கள். இதுதான் தேவனின் விருப்பம். மூன்றாவதாக மல் 2:15ல் கர்த்தர் ஜனங்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்ததின் நோக்கத்தை விளக்குகிறார். தேவ பக்தியுள்ள சந்ததியை பெறும்படி ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்து, ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்கு துரோகம் பண்ணாமல் இருக்க எச்சரிக்கை யாயிருங்கள் என்றும் சொல்லுகிறதைக் காண்கிறோம். பிள்ளைகளைக் கர்த்தரை அறிகிற அறிவிலும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயப்படுதலிலும் கருத்தாய் வளருங்கள். கர்த்தருடைய வசனத்தை உங்கள் இருதயங்களில் பதித்து பிள்ளைகளுக்கு கருத்தாய் உபதேசியுங்கள். உங்கள் வாழ்நாள் நீடித்திருக்கும்.

ஜெபம்: இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம். ஆமென்.

 

Download Name Play Size Length
download Micah003

0.5 MB 2:44 min
download Micah004

0.6 MB 3:22 min
download zMeditations Gen 1.31J

0.6 MB 3:23 min